பெரம்பலூர் மாவட்டம், பெருவாரியான மானாவாரி நிலங்களைக் கொண்ட மாவட்டமாகும். இங்கு சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் பரவலாக சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சொட்டு நீர் பாசன விவசாயிகள் குழி அமைப்பிற்கு அரசின் மானியம் மூன்றாயிரம் ரூபாய் பெற விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் ஆட்சியர் வே. சாந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் நிகழாண்டு சொட்டுநீர் பாசனம் அமைக்க 4 ஆயிரத்து 350 ஹெக்டேர் பரப்பளவிற்கு 30 கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு குழி எடுத்த லுக்கு ஏக்கருக்கு 3000 மானியம் வழங்கப்படுகிறது.
இதற்கு பதிவு செய்யும்போது தங்களது வங்கிக் கணக்கில் நகலை விவசாயிகள் சமர்ப்பித்தல் வேண்டும். பணியாணை வழங்கப்பட்ட பின்னர் ஒன்றே கால் அடி முதல் 2 அடி அகலம் வரையிலும் விவசாயிகள் சொந்த செலவில் குழி எடுத்தல் வேண்டும். அதன் பின்னர் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் வயலில் ஆய்வு மேற்கொண்டு MIMIS (Micro Irrigation Management Information System) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதற்கான பட்டியலை சமர்ப்பித்து மானியம் பெறலாம்" எனக் கேட்டுக்கொண்டார்.