ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடமாடும் கரோனா மருத்துவப் பரிசோதனை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கதிரவன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ் தென்னரசு ஆகியோர் தொடங்கிவைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 389 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் 83 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுவரை 80 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சிப் பகுதியில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள், அரசு தலைமை மருத்துவமனையில் 180 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் திருமண மண்டபங்களும் கைவசம் உள்ளன.
வெளிமாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வேலைக்கு வருவோர்களுக்கு தற்போதுவரை 800 பேருக்கு பணியாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசங்கள், சானிடைசர்கள் உள்ளிட்டவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார்.