திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த புதுவாயல் கிராமத்தில் உள்ள ஏரியில் மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீரை முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாசனத்திற்காகப் பயன்படுத்திவருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஏரியில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தற்போது ஏரியில் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து வனம்போல் காட்சி அளிக்கிறது.
ஏரியைத் தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு பலமுறை அப்பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறை அலுவலர்கள் முதல் ஆட்சியர் வரை கோரிக்கை மனுக்கள் வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது, மாவட்ட நிர்வாகம் அந்த ஏரியில் மண் குவாரி அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இருமுறை போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், நேற்று மண் அள்ளுவதற்காக மண் குவாரி ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்தனர்.
இதையறிந்த கிராம மக்கள் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசெல்லும்படி எச்சரித்தனர்.
இதனால், கொதிப்படைந்த கிராம மக்கள் ஏரியில் மண் அள்ளினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் அதனைப் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு அரசு தனிநபர்கள் வருவாய் ஈட்டவே மண் குவாரிகளை நடத்த அனுமதி வழங்கிவருவதாகக் குற்றஞ்சாட்டி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இது குறித்து நேரடியாகச் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லுமாறும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியலில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
ஆனால், கிராம மக்கள் மண் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கைவிடுத்தனர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.