ஈரோடு பூந்துறை பிரதானச் சாலைப் பகுதியிலுள்ள ஆனைக்கல்பாளையத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் 200க்கும் மேற்பட்ட வியாபார நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆனைக்கல்பாளையத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டஉள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் கடையின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மதுபானக் கடையை மூடிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அப்பகுதியினர், இந்து முன்னணி அமைப்பினருடன் இணைந்து கடையைத் திறக்க வேண்டாம் என்று கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
இருந்தபோதிலும், தற்போது கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியளிந்துள்ளது. புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையினால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களுக்கும், வியாபார நிறுவனங்களை நடத்தி வருவோர் உள்பட தொழில் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமென்பதால் உடனடியாக மதுபானக் கடை மூடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தங்களது கோரிக்கையை ஏற்று மதுபானக் கடை மூடப்படாவிட்டால் அடுத்தக்கட்டமாக மதுபானக் கடை மூடப்படும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.