தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி ஊராட்சி தூய்மைப் பணி, நீர்நிலைகள் பராமரிப்பு, சுகாதார நடவடிக்கை, விவசாயம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செம்மையாகச் செய்து முதன்மை ஊராட்சியாகத் திகழ்ந்துவருகிறது.
இந்த ஊராட்சி நிர்வாகம் ஊராட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு விதங்களில் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த ஊராட்சியில் உள்ள ஏரி, குளங்களின் பரப்பளவு, கோயில்கள், வணிக வளாகங்கள், விவசாய நிலங்களில் செய்யப்படும் பயிர்கள், நன்சென் மற்றும் புன்செய் நிலத்தின் பரப்பளவு, முக்கியமான தொலைபேசி எண்கள், ஊரின் வரலாறு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஊராட்சிக்கு என தனி இணையதளம் அமைத்து, புதிய வழிமுறையை இந்த அத்திவெட்டி ஊராட்சி நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. இதன்மூலம் அரசு அலுவலர்கள் மட்டுமல்லாமல் ஊராட்சிக்குட்பட்ட ஒவ்வொருவரும் தங்களது கிராமத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த இணையதளம் அமைந்துள்ளது.