மதுரையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையங்களில் அதிகப்படியான ஆட்டோக்கள் இயக்கப்படும் நிலையில், இதில் சில ஆட்டோக்கள் டீசல் மூலமாகவும், சில ஆட்டோக்கள் எல்பிஜி கேஸ் மூலமாகவும் இயக்கப்படுகிறது.
மதுரையில் சுமார் 2 ஆயிரத்து 223 ஆட்டோக்கள் ஓடுவதாகவும், இது தவிர வாடகைக் கார், இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இதனால், மதுரை நகர் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதோடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் பகுதிகளில் பணிகள் நடந்துவருகிறது.
இந்நிலையில், புதிய ஆட்டோ ரிக்சாக்களுக்கு அலுவலர்கள் அனுமதி வழங்குகிறார்கள்.
இதுபோக மதுரை நகர் பகுதியில் லோடு வேன், லாரிகள் அதிகமாக இயக்கப்படுவதால் மாநகர் பகுதியில் அதிகமாக சாலை விபத்துகள் ஏற்படுகிறது.
எனவே புதிய ஆட்டோ ரிக்சாகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உயர் அலுவலர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ள நிலையிலும், மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மதுரை மாநகர் பகுதியில் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்குத் தொடர்பாக மாநில போக்குவரத்து துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.