திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவாயல் ஏரியில் சவுடு மண் குவாரி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததை அறிந்து கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரண்டு முறை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ,பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இன்று ஏரியில் மண் அள்ளுவதற்காக ஜேசிபி இயந்திரங்கள், காவலர்கள் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கிராம ஏரியில் மண் அள்ளக்கூடாது எனக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறும் ஏரி ஏற்கனவே தூர்வாரல் என்ற பெயரில் மணல் வளம் சுரண்டப்பட்டதால் 70அடியில் இருந்த நிலத்தடி நீர் 140 அடிக்கு சரிந்து விட்டது.
தற்போது மீண்டும் குவாரி செய்யப்பட்டால் ஏரியில் எஞ்சியுள்ள மணலும் சுரண்டப்பட்டு நிலத்தடி நீர் அதலபாதாளமான 200அடிக்கு கீழ் சென்றுவிடும் எனவும், குடிநீருக்கு பக்கத்துக்கு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும் என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.