கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் ஆண்டிற்கு இரண்டு போகம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.
முதல் போக பாசனத்திற்காக ஜூலை மாத இறுதி வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். இந்நிலையில், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வந்ததால் சற்று தாமதமானது, தற்போது கால்வாய்கள் குடிமராமத்து பணிகள் மூலம் சுத்தம் செய்யப்பட்டதால் முதல்போகத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒசூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கு 120 நாள்கள் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இன்று, கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
ஆகஸ்ட் 12 முதல், டிசம்பர் 9 வரை 120 நாள்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு கால்வாய்கள் வழியாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வலதுபுற கால்வாய் மூலம் 2082 ஏக்கர்களும், இடதுபுற கால்வாயால் ஐந்து ஆயிரத்து 918 ஏக்கர்களும் பயனடைய உள்ளன.
முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசனம் பெற உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணையின் மொத்த நீர்மட்ட அளவு 44.28 அடிகளில், தற்போது 40.34 அடி நீர் இருப்பு உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.