திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ஒரு மதுபான கடையின் முன்பு இன்று (ஜூலை 23) அதிகாலையில் தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சின்னாளபட்டியை சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பூண்டி சரவணன் என்ற சரவணன் என்றும், இவர் மீது திருப்பூர், கோவை போன்ற பல இடங்களில் பல்வேறு வழக்குகளிலும், 2014 குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதாகி வெளிவந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து சரவணன் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா நேரில் வந்து ஆய்வு செய்தார். இந்நிலையில் சின்னாளபட்டி பழைய காவல்நிலையம் அருகில் வசித்து வரும் கோபி(38) என்பவர் கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
விசாரணையில், சின்னாளபட்டியில் உள்ள மற்றொரு மதுக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தவரை உடனடியாக கைது செய்து விசாரித்தனர். இதில் நேற்று(ஜூலை 22) இரவு கோபி மது அருந்திய போது தன்னிடம் பூண்டி சரவணன் அடித்து மதுவை பறித்ததாகவும் அதனால் ஆத்திரத்தில் நள்ளிரவில் மது போதையில் மயங்கிய நிலையில் சரவணன் தலையில் கல்லை போட்டு கோபி கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் குற்றவாளி கோபி என்பதை காவல்துறையினர் உறுதி செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை இரண்டு மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.