உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் ஐந்தாவது முறையாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் எப்போது உலகக்கோப்பை தொடர் நடைபெற்றாலும் இந்திய ரசிகர்களுக்கு 1983 உலகக்கோப்பையும், கபில்தேவ் நிகழ்த்திய சாதனையும்தான் நினைவுக்கு வரும். ஏனெனில், கபில்தேவ் என்ற ஒரு ஆல்ரவுண்டர் அந்தத் தொடரில் நிகழ்த்திய மேஜிக் ஏராளம். அவர் இல்லையெனில் இந்திய அணி 1983இல் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்குமா என்பது சந்தேகம். கேப்டன் என்றால் இப்படிதான் அணியை வழிநடத்த வேண்டும் என்பதற்கு உதராணமாக திகழ்ந்தார் கபில்.
1983இல் இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ஜூன் 18, டுன்பிரிட்ஜ் வேல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இருந்தது இந்திய அணி.
இப்போட்டியில் டாஸ் கூட கபில் தேவுக்கு சாதகமாக அமைந்தது. டாஸ் வென்ற உடன் அவர் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். ஆனால், அவர் உடனடியாக பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என அவரே எதிர்பார்த்திருக்கமாட்டார். ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணியுடன் இந்திய அணி ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில், களத்தில் நுழைந்தார் கபில். ஆனால் கபில் வந்த உடன் யஷ்பால் ஷர்மா உடனடியாக பெவிலியனுக்கு திரும்ப, இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

மைதானத்தில் இப்போட்டியைக் காண வந்த ரசிகர்கள், இந்திய அணி 100 ரன்களுக்குள் சுருண்டுவிடும் என நினைத்தனர். இதனால், இந்திய அணி ஊருக்கு பெட்டியைக் கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என பார்வையாளர்கள் கருதினர். ஏன், இந்திய அணியில் இருந்த வீரர்களுக்கு கூட இப்போட்டியில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருந்திருக்காது.
ஆனால், அவர்களது நினைப்பை மாற்றினார் கபில். 17க்கு ஐந்து விக்கெட் இழந்தால் என்ன நான் இருக்கிறேன் என தன்னம்பிக்கையுடன் பேட்டிங் செய்தார். ரோஜர் பின்னியுடன் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து கபில் ஓரளவு ரன்களை உயர்த்திய போது, ரோஜர் பின்னியும் அவுட். அவரைத் தொடர்ந்து வந்த ரவி சாஸ்திரியும் அவுட். இதனால், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்து 78 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய மதன் லால், கபில் தேவுக்கு கைகொடுக்க, இந்திய அணியின் ஸ்கோர் 100ஐ எட்டியது. கபில் தேவின் பொறுப்பு கலந்த அதிரடி ஆட்டத்தால் அவர் அரைசதம் விளாச, இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் ஹோப் வந்தது, கூடவே சேர்ந்து அதிர்ச்சியும் வந்தது. மதன் லாலும் மற்ற வீரர்களை போல பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி 140 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது.

சரி மதன் லால் போனா என்ன, விக்கெட் கீப்பர் சயத் கிர்மானி இருக்காரே என காளரை தூக்கிவிட்டு தைரியத்துடன் இருந்தார் கபில். பின்னர் மைதானத்தில் நடந்தது எல்லாமே கபில் தேவின் மேஜிக்தான். ஜிம்பாப்வே அணியின் பவுலர்கள் வீசிய பந்து எட்டு திசையிலும் எகிறியது. கபில் தேவ் சதத்தை எட்டினார், இறுதியாக 175 ரன்களை எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
இதனால், இந்திய அணி 60 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 266 ரன்களை குவித்திருந்தது. 17 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டு என்ற நிலையில் இருந்து, 266 ரன்களுக்கு எட்டு விக்கெட் என நம்பமுடியாத நிலையை அடையச் செய்து இந்திய அணியைக் கரை சேர்த்தார் கபில்.138 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்ட அவர், 16 பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் என 175 ரன்களை விளாசியது இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
அதுவரை பெரிய பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்படாத கபில், அந்தப் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனாக மாறினார். இவரது உதவியால் இந்திய அணி இப்போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதுவரை உலகக்கோப்பையிலேயே இதுபோன்ற ஒரு ஆட்டத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள், பார்க்கவும் முடியாது.

ஆம், ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படி ஒரு ஸ்பெஷலான இன்னிங்ஸை நாம் இப்போது யூடியூப்பில் தேடினாலும் கிடைக்காது. அப்போது, உலகக்கோப்பைத் தொடரை ஒளிபரப்பிய பிபிசி, இந்தப் போட்டியின் போது ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டதால், அதன் ஒளிபரப்பு தடைபட்டது. ஆனால், இப்படி ஒரு போட்டியை நாம் மிஸ் செய்துவிட்டோமே என பிபிசி பின்நாட்களில் வருந்தி இருக்கும்.
ஊடகங்கள் மூலமாகதான் இன்றைய தலைமுறையினருக்கு கபில் தேவால் இந்திய அணி வெற்றிபெற்றது தெரியவந்தது. இப்போட்டி ஒளிபரப்பாகாததால், ஆளாளுக்கு இப்போட்டி குறித்து ஏதேனும் கதைகட்டுவதும் உண்டு.
(Impossible is nothing) இம்பாசிபிலை கபில் பாசிபில் ஆக்கினார். நாம் நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கபில் தேவின் இந்த 175 ரன்கள் என்றே கூறலாம். உலகக்கோப்பையில் அதன் பின், ஏரளமான வீரர்கள் 175க்கும் அதிகமான ரன்களை விளாசினாலும், 17க்கு ஐந்து விக்கெட் போன்ற நிலைமையில் இருந்து எந்த வீரரும் 175 ரன்களை அடித்ததில்லை.
இந்தியா - ஜிம்பாப்வே போட்டி என்பதற்கு பதிலாக, கபில் தேவின் 175 என்றுதான் இப்போட்டி மாறியது. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இன்றோடு 36 வருடங்கள் நிறைவடைகிறது. தேங்யூ கபில் ஃபார் எவ்ரிதிங்