சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி பகுதியை ஒட்டியுள்ள கோட்டமேட்டுப்பட்டி ரோஜா நகரில் வீதிசாலைகள் மண் சாலையாக உள்ளதால் மழை காலங்களில் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, இன்று ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் தார்சாலை பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதில் முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார். இதேபோல், எம்.செட்டிபட்டி ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளையும் வெற்றிவேல் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், தளபதி, ராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.