கரோனா தொற்று பரவல் காரணமாக 100 நாள்களுக்கும் மேலாக முழுமையான அளவில் இயங்காத சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை, குறைக்கப்பட்ட அமர்வுகள், பணியாளர்கள் பணிக்கு வரும் நடைமுறை குறித்து அவ்வப்போது தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுவருகிறார்.
இந்நிலையில் ஜூலை 6ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை வீடியோவில் விசாரிப்பார்கள் என நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும் சென்னை உயர் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் பணிக்குவருவது தொடர்பான புதிய விதிமுறைகளைத் தலைமைப் பதிவாளர் குமரப்பன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அதில் கூறியதாவது:
அனைத்து வேலை நாள்களும் சார்பு உதவிப் பதிவாளர் அந்தஸ்தில் உள்ளவர்களும், அனைத்துப் பிரிவு அலுவலர்களும் அலுவலகத்திற்குக் கட்டாயம் வர வேண்டும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 50 விழுக்காடு ஊழியர்கள் அலுவலகத்திலிருந்தும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தும் பணியாற்றுவதைப் பிரிவு அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
நீதிமன்றம் வருவதற்கு மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பதைக் கருத்தில்கொண்டு நீதிமன்ற ஊழியர்கள் அவர்களின் சொந்த வாகனங்களிலேயே அலுவலகம் வர அறிவுறுத்தப்படுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் வரும் ஊழியர்கள் பாரிஸ் கார்னர் அருகே உள்ள எம்.பி.ஏ. நுழைவுவாயிலைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் பணிக்கு வரும் ஊழியர்கள் http://www.mhc.tn.gov.in/staffdec என்ற இணைப்பில் சென்று முகக்கவசம் பயன்படுத்துவது, கைகளை முறையாகக் கழுவுவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, உடல் வெப்பநிலை செய்துகொண்டது உள்ளிட்டவற்றைச் சுய அறிவிப்பு பதிவிட வேண்டும். மேலும், இருமல், சளி, காய்ச்சல், சுவாசப் பிரச்சினை ஏதும் இல்லை, இணை நோய்கள் ஏதுமில்லை, கட்டுப்படுத்தபட்ட பகுதியிலிருந்து வரவில்லை, கர்ப்பிணி இல்லை, குடும்ப உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்படவில்லை உள்ளிட்ட சுய அறிவிப்புகளையும் பதிவிட வேண்டும். இந்தத் தகவலை பதிவிடாதவர்களுக்கு வருகைப்பதிவு கிடையாது.
கரோனா பரிசோதனைக்கு மாதிரி கொடுத்துள்ளவர்கள் அதன் முடிவு நெகடிவ் (எதிர்மறை) என வரும் வரை பணிக்கு வரக்கூடாது. கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் குடும்பத்தில் இருந்தால் அவர்களும் பணிக்கு வரக் கூடாது. ஒருவேளை அப்படிப்பட்ட தகவலை மறைத்து பணிக்கு வந்தது கண்டறியப்பட்டால், தகுந்த முறையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.