தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக கடந்த மார்ச்24 ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதனையடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்ணகாணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் கட்டுவதற்கான 60 ஏக்கர் இடத்தை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கான சிறப்பு மாவட்ட ஆட்சியராக லலிதாவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாத் ஆகியோரை தமிழ்நாடு அரசு நியமித்தது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் வரும் 15ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்து பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர்.
தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்கள், எல்லை வரையரை உள்ளிட்ட அடிப்படை பணிகளை முடிக்க வேண்டும். அதனால், பொறுப்பேற்கும் சிறப்பு அலுவலர்களுக்கான தற்காலிக அலுவலகங்கள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கீழவீதியில் உள்ள வணிகவரித்துறை அலுவலக கட்டடம், மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபம் உள்ளிட்ட ஒருசில இடங்களை தேர்வு செய்து வருவாய்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மருத்துவக் கழிவுகளை அகற்ற நடமாடும் எரியூட்டு வாகனம்' - அமைச்சர் வேலுமணி