கிரிக்கெட்டின் 'யூனிவர்சல் பாஸ்' என்றழைக்கப்படுவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கெயில். சுமார் 20 ஆண்டுகளாக, கிரிக்கெட் விளையாடி வரும் இவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
இவர், தற்போது இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் ஐந்தாவது முறையாக பங்கேற்கவுள்ளார். இதுமட்டுமின்றி, இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாகவும் விளங்கவுள்ளார்.
உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து அவர் கூறுகையில்,
"நான் 5 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என கனவிலும் கூட நினைத்து பார்க்கவில்லை. ஆனால், எப்படியோ நடந்துவிட்டது. இதற்கு எல்லாம் எனது நிலையான ஆட்டத்திறன்தான் காரணம். அதற்கான பலன்தான் தற்போது பல பாராட்டுக்களை நான் பெற்றுள்ளேன்.
நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டு வருடங்களுக்கு முன்னரே நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற மனநிலையில் இருந்தேன். ஆனால், ரசிகர்கள் என்னிடம் ஓய்வு பெறதாதீர்கள் எனத் தொடர்ந்து ஆதரவு வழங்கினர். அவர்கள் என் மீது வைத்த ஆதரவும், நம்பிக்கையும்தான், என்னை இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வைத்தது. உலகக் கோப்பை தொடரையும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கெயில், இரண்டு சதம், இரண்டு அரைசதம் என நான்கு போட்டிகளில் 424 ரன்களை குவித்தார். இந்த தொடரோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஓய்வு பெறும் கெயில், உலகக் கோப்பையை வென்றுத் தருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.