நெல்லை: நெல்லை மாவட்டம், தெற்கு வள்ளியூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவர் முத்துராமன். இவர் கடந்த 11 ஆம் தேதி நெல்லை மாவட்டத்தின் தெற்கு வள்ளியூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துராமனை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு முத்துராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து வள்ளியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, முத்துராமன் திமுக கட்சியில் இருப்பதால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டியால் யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.