இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான வீரராக திகழ்பவர் தோனி. விக்கெட் கீப்பரான இவர், பலமுறை பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கி எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார்.
இந்நிலையில், தோனி வழங்கும் ஆலோசனைகள் குறித்து இந்தியாவின் சைனாமேன் என்றழைக்கப்படும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறுகையில்,
"ஆட்டத்தின்போது தோனி அதிகம் பேச மாட்டார். ஓவரின் இடையே அவருக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால் மட்டுமே பேசுவார். இருப்பினும் தோனி வழங்கிய அறிவுரைகள் பலமுறை தவறாக சென்றுள்ளன. ஆனால், இதையெல்லாம் அவரிடம் சொல்ல முடியாது" என்றார்.
தற்போது, குல்தீப் யாதவின் இந்தக் கருத்து தோனியின் ரசிகர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப் யாதவ், தோனி இருவரும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நான்காவது முறையாக உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் தோனி, இம்முறை வீரராக இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியப் பங்கு வகிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.