தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பின்தங்கிய பாலமலை கிராமத்தில் பல ஆண்டுகளாக சுமார் பத்து கிலோமீட்டர் அளவிற்கு மண் சாலை உள்ளது.
குறிப்பிட்ட நான்கு கிலோ மீட்டர் அளவிற்கு வனப்பகுதியிலும், மீதமுள்ள ஆறு கிலோமீட்டர் பஞ்சாயத்து கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இப்பகுதி ஒரு பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலரை உள்ளடக்கியப் பகுதியாகும். இங்கு 1360 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிரதானத் தொழில் விவசாயம் தான். விவசாய உற்பத்தி விளைபொருட்களை மழைக்காலங்களில் அருகிலுள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமன்றி பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் இந்த சாலை வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பாலமலை கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தினை சரி செய்ய பல ஆண்டுகளாக உள்ள மண் சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்றித் தர வேண்டும் என தருமபுரி எம்.பி., செந்தில் குமார் மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.