திருவனந்தபுரத்தை அடுத்த நெடுமங்காடு என்ற இடத்தில் வசித்து வருபவர் மஞ்சுசா(35). ஒரு வருடத்துக்கு முன் தன் கணவனை இழந்த இவர், மகள் மீராவுடன்(16) வாடகை வீட்டில் வசித்து வந்தார். நெடுமங்காட்டில் உள்ள ஒரு பள்ளியில், பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார் மீரா. இந்நிலையில், தனது மகளை திடீரென காணவில்லை என்றும் யாரோ ஒரு பையனுடன் ஓடிவிட்டதாகக் தன் அம்மாவிடம் தெரிவித்துள்ளார் மஞ்சுசா.
மேலும், அவளைத் தேடி ’தமிழ்நாட்டுக்குப் போகிறேன்’ என்று சொல்லி கிளம்பி உள்ளார். இரண்டு நாட்கள் கழித்து, மஞ்சுவின் அம்மா, அவரை தொடர்புகொள்ள முயன்றபோது, கைப்பேசி எண் ”அணைத்து வைக்கப்பட்டுள்ளது” என்று வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், நெடுமங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து நடத்திய காவல்துறையினருக்குப் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
மஞ்சுசா, இறந்து போன தனது கணவரின் நண்பன் அனிஷுடன், குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தது தெரியவந்தது. உடனடியாக விரைந்து சென்ற கேரளா காவல்துறையினர், இருவரையும் கைது செய்து அழைத்து வந்தனர்.
காவல்துறையினரின் கிடிக்குப்பிடியான விசாரணையில் மஞ்சுசா அளித்த வாக்குமூலத்தில், “கணவர் இறந்த பிறகு, அவரது நண்பர் அனிஷுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னாளில் அது வரம்பு மீறிய காதலாக மாறி, மகள் பள்ளிக்குச் செல்லும் சமயத்தில், உல்லாசமாக இருந்து வந்தோம். மகள் மீராவின் பள்ளிக்கு, விடுமுறை அளித்ததைத் தொடர்ந்து, அனிஷுடன் நேரத்தைச் செலவழிக்க முடியவில்லை. இப்படியிருந்த தருணத்தில், ஒரு நாள் அனிஷுடன் வீட்டில் உல்லாசமாக இருந்ததை மீரா தெரிந்துகொண்டார்.
இது தங்களின் சுக வாழ்க்கைக்குப் பாதகம் விளைவிக்கும் என்று எண்ணி, அனிஷுடன் சேர்ந்து, மீராவைக் கொல்லத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஜூன் 10ஆம் தேதி, துணியால் மீராவின் கழுத்தை நெரித்து இருவரும் சேர்ந்து கொலை செய்தோம். பின்னர், 5 கிமீ தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில், மீராவின் உடலில் கல்லைவைத்துக் கட்டி வீசினோம்” என்று வாய்மொழியாக நடந்ததை காவல்துறையினரிடம் விளக்கினார்.
இதனையடுத்து, மஞ்சுசா சொன்ன இடத்திற்குச் சென்று மீராவின் உடலை காவல்துறையினர் மீட்டனர். இச்சம்பவம் நடந்து 19 நாட்கள் ஆகியிருந்த நிலையில், மீராவின் உடல் முற்றிலும் அழுகிய நிலையிலேயே மீட்கப்பட்டது. இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மேற்கொண்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.