பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (58). இவரது மனைவி லட்சுமி (53) அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவர்கள் இருவருக்கும் பிரபு (எ) கவிக்குமார் (30) என்ற மகன் உள்ளார். எம்.பி.ஏ. படித்துள்ள கவிக்குமார் அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவருகிறார்.
வேட்டையாடுவதில் ஆர்வமுள்ள கவிக்குமார் சில ஆண்டுகளாக தனது நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி வன எல்லைக்குட்பட்ட நெடுங்கூர், காப்புக்காடு பகுதிகளில் வன உயிரின வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ”பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்ற பழமொழிக்கேற்ப தொடர்ந்து சட்டத்திற்குப் புறம்பான இந்தச் செயலில் ஈடுபட்டுவந்த கவிக்குமார் குறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் சுஜாதாவுக்கு புகார் வந்துள்ளது.
இந்நிலையில், அலுவலர் சுஜாதாவின் ஆணையின்படி இதுகுறித்து விசாரணையை மேற்கொள்ள வனச் சரகர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் பாடாலூருக்குச் சென்றனர். இளைஞர் கவிக்குமாரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வனத்துறையினருக்குக் கிடைத்துள்ளது.
அதில், கவிக்குமார் தனது நண்பர்களுடன் இணைந்து பல வன உயிரினங்களை வேட்டையாடியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் மற்றும் கணினியில் இதுதொடர்பாக இருந்த ஆதாரங்களையும் வனத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர். அத்துடன், இளைஞர் கவிக்குமார் ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஹன்டிங் கிளப்புடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
கவிக்குமார் வேட்டையில் ஈடுபட அவரது தாயும் பல்வேறு வகைகளில் உதவியாக இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து கவிக்குமார், லட்சுமி ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைதுசெய்தனர். இவர்கள் அளித்த தகவலின்பேரில் அதே பகுதியிலுள்ள கொளத்தூரைச் சேர்ந்த மகாலிங்கம் (58) என்பவரையும் கைதுசெய்து, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, ஹெட்லைட் போன்றவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.