கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டுமான நலவாரியம், ஓட்டுநர் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்களுக்கு 9 கோடியே 88 லட்சத்து 36ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பதிவுபெற்ற 970 கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
இதனையடுத்து நிகழ்வில் பேசிய அமைச்சர் அமைச்சர் நிலோஃபர் கபீல், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தொழிலாளர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருந்தார். குறிப்பாக, ஒரு லட்சம் ரூபாயாக இருந்த கட்டுமான தொழிலாளர்களுக்கான விபத்து நிவாரண நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பணியாற்றும்போது ஏற்படும் விபத்தில் இறந்தால் அளிக்கப்படும் ரூ. லட்சத்தை, மருத்துவ சிகிச்சையில் இறந்தாலும் வழங்கும் ஆணையை பிறப்பித்தார். ஜெயலலிதா ஆட்சியில் பல்வேறு நலவாரியம் ஏற்படுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வெளியூரிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்கு இரண்டு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்பட்டன. தொழிலாளர் வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினரின் கல்வி, மருத்துவம், விபத்து நிவாரண உதவி பெற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் கரோனா பாதிப்பின் போது தொழிலாளர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக 12 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000/-வீதம் 24 கோடி ரூபாய் நிதியுதவியும், 13 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000/-வீதம் நிவாரண தொகையாக ரூ.26 கோடியும், 83 ஆயிரத்து 500 அமைப்புசாரா ஓட்டுநர்களுக்கு தலா ரூ.2000/- வீதம் ரூ.16 கோடியே 70 லட்சம் ரூபாய் நிவாரண தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், அத்தியாவசிய உணவுப்பொருள்களான அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருள்களும் வழங்கப்பட்டன. வெளிமாநிலத்திலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் 15 கிலோ அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருள்களும் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரும் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு ரயில் மற்றும் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு அனைத்து செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டது.
சென்னையில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் அடையாள அட்டை காண்பித்து விலையில்லாமல் உணவு சாப்பிட தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தும் தந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கட்டுமான நலவாரியத்தைச் சேர்ந்த 43 ஆயிரத்து 495 உறுப்பினர்களுக்கும், ஓட்டுநர் நலவாரியத்தைச் சேர்ந்த 736 உறுப்பினர்களுக்கும் அரிச, பருப்பு, எண்ணெய் அடங்கிய உணவுப் பொருள்கள் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் 110- விதியின்கீழ் கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5 வகையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உத்தரவிட்டார்கள். அதன்படி இன்று (ஜூன் 5) தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தலா ரூபாய் 2000/- மதிப்பில் பதிவுபெற்ற 970 கட்டுமான தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூபாய் 19 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என கூறுனார்.