சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு மண்டலம் வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், தொடர்ச்சியாக கரோனா ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உள்பட்ட ராயப்பேட்டை பகுதியில் அமைச்சர் காமராஜ் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகக் கவசம், கபசுரக் குடிநீர், மருந்து மாத்திரைகளை வழங்கினார். பின்னர் திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி விக்டோரியா விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா சிறப்பு மருத்துவ முகாம்களை ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலம் முதல் தமிழ்நாட்டில் நோய் தடுப்பு பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் 15 மண்டலங்களுக்கும் தனி அலுவலர்கள், குழு அமைக்கப்பட்டது. அதனை மேலும் கண்காணித்து பணிகளை செழுமைப்படுத்த அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு பணிகளில் உயர் அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். சென்னையில் வெகு விரைவில் கரோனா இல்லாத நிலை உருவாக்கப்படும். அண்ணாநகர், கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மருத்துவ முகாம்கள் அதிகரிக்கப்படும்.
முறையான ஆய்வுக்கு பின்னரே தற்போதைய நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் வீடுகளை மட்டும் கட்டுப்படுத்தினாலே நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். தமிழ்நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பெற்றவர்களில் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கரோனாவை கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஒத்துழைப்புகள் தர வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அரசு வழங்கியுள்ள தளர்வுகளை சரியாக மக்கள் பயன்படுத்த வேண்டும். நியாய விலை கடைகள் மூலம் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சொல்லில் மட்டுமல்ல செயலிலும் வலுவாக செயல்பட கூடியவர். கூட்டணிக் கட்சித் தலைவர்களான ராமதாஸும், அன்புமணியும் அவர்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். வல்லுநர் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் தான் அரசு முடிவுகள் எடுத்துவருகிறது. சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது" என்றார்.