நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இன்று ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 150 ரன் இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், டு பிளசிஸ், ரெய்னா, ராயுடு, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், மறுபக்கம் வாட்சன் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தி அரைசதம் விளாசினார். இதைத்தொடர்ந்து, சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை வீச மலிங்கா அழைக்கப்பட்டார்.
முதல் மூன்று பந்துகளில் ஐந்து ரன்களை எடுத்த வாட்சன், நான்காவது பந்தில் ரன் அவுட் ஆனார். இதையடுத்து, ஐந்தாவது பந்தை சந்தித்த ஷர்துல் தாக்கூர் இரண்டு ரன்களை அடித்ததால், ஆட்டத்தின் வெற்றிக்கு கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது.
மலிங்கா வீசிய கடைசி பந்தில் ஷர்துல் தாக்கூர் எல்பிடபள்யூ முறையில் அவுட் ஆனதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக, வாட்சன் 80 ரன்கள் அடித்தார். மும்பை அணி சார்பில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.