அர்ஜென்டினா - பாராகுவே:
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், குரூப் பி பிரிவில் உள்ள அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் கொலாம்பியாவிடம் தோல்வி அடைந்த நிலையில், இன்று தனது இரண்டாவது போட்டியில் பாராகுவே அணியை எதிர்கொண்டது.
பாராகுவே அணியின் ஆதிக்கம்:
முதல் பாதி ஆட்டத்தில் பாராகுவே அணி, பந்தை சக வீரர்களுக்கு பாஸ் செய்து விளையாடுவதில் அர்ஜென்டினாவை விட சிறப்பாக செயல்பட்டது. இதனால், 37ஆவது நிமிடத்தில் பாராகுவே வீரர் ரிச்சர்ட் சான்செஸ் சூப்பரான முறையில் கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டத்தில் பாராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதி ஆட்டம் முழுவதும் பாராகுவே அணி, ஆதிக்கம் செலுத்தியது.
ஆகுவேரோவின் எண்ட்ரி:
பின்னர், நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் மட்டுமே அர்ஜென்டினா அணி, தாக்குதல் முறையில் ஆடியது. குறிப்பாக, சர்ஜியோ அகுவேரோ மாற்று வீரராக அர்ஜென்டினா அணிக்கு களமிறங்கியுடன், அர்ஜென்டினா அணியின் ஆட்டம் முற்றிலும் மாறியது.
இதைத்தொடர்ந்து, வீடியோ உதவி நடுவர் (வார்) முறையில் அர்ஜென்டினா அணிக்கு 57ஆவது நிமிடத்தில் பெனால்டி வழங்கப்பட்டது. அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்ஸி இதை சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். பின்னர், இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தவறியதால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. பொனால்டியைத் தவிர இப்போட்டியில் மெஸ்ஸி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாதது, அர்ஜென்டினா ரசிகர்களை வருத்ததில் ஆழ்த்தியது.
காலிறுதிக்கு முன்னேறுமா அர்ஜென்டினா?
இதன் மூலம் அர்ஜென்டினா அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா என ஒரேயொரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. மறுமுனையில், பாராகுவே அணி இரண்டு போட்டிகளையும் டிரா செய்ததால், இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால், அர்ஜென்டினா அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அர்ஜென்டினா அணியின் கடைசி வாய்ப்பு:
இதைத்தொடர்ந்து, 23ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் பாராகுவே அணி, கொலாம்பியா அணியுடனான போட்டியில் தோல்வி அடைய வேண்டும். மேலும், அர்ஜென்டினா அணி கத்தார் அணியுடனான போட்டியில் வெற்றிபெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே அர்ஜென்டினா அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும்.