காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 519ஆக அதிகரித்துள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் மட்டும் 444 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று பரவாமல் இருக்க உணவகங்கள், மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் ஒரு சில கடைகள் மட்டும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி மாலை 4 மணிக்கு மேலும் செயல்படுகிறது. இதன் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக நடமாடுகின்றனர்.
இதனை ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.