மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புப் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூன்று அடுக்குமுறையில் செயல்பட்டுவருகின்றது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் நபார்டு வங்கி வழிகாட்டுதல்களோடு செயல்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வங்கிகள் தனியார்மயமாவதை ஊக்கப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு வங்கிகளின் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கடன் பெறுவதற்கும், பேரிடர் காலத்தில் நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ள வங்கியாக செயல்பட்டு வருகிறது.
வங்கிகளுக்குதத் தேவையான நிதி உதவிகளை நபார்டு வங்கி மூலம் உரிய உத்தரவாதமளித்து நிதி உதவியை நேரடியாக மாநில அரசுகளே பொறுப்பேற்று வழங்கிவருகிறது. இந்நிலையில் கடந்தாண்டு (2019)திடீரென கிசான் கிரெடிட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் மட்டுமே கடன் வழங்க அனுமதியை மத்திய அரசு வழங்கியது.
இதனை எதிர்த்து தீவிர போராட்டம் தொடங்கியதால் அதனை ஏற்றுக் கொள்வதாகவும், பழைய நடை முறையையே தொடர்வதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. நிகழாண்டு தமிழ்நாட்டில் கிசான் கிரெடிட் கார்டு (KCC) வழங்கப்பட்டு வருவதாக அரசால் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே நகைக்கடன் பெற்ற விவசாயிகளுக்கு KCC வழங்கப்படும் பட்சத்தில் அக்கார்டு பெறும் விவசாயி சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் முதன்மை உறுப்பினராவார். அதனடிப்படையில் நகை கடன் KCC யாக மாற்றமடைந்த பின் நகைகள் விடுவிக்கப்பட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் சலுகைகள் பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு கடந்த மாதம் மாநில கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது.
இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் நகர கூட்டுறவு வங்கிகள் மட்டும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அரசாணை வெளியிட்டது.
தற்போது தமிழக கூட்டுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் புதிய கடன் பெற முடியாமல் பறித் தவிக்கிறார்கள். பழைய கடனை செலுத்திய பின் புதிய கடன் பெற முடியாமல் கரும்பு விவசாயிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அடகு வைத்தவர்களின் நகை என்ன ஆனது என்று தெரியாமல் விவசாயிகள் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும். நகைக்கடன் கிசான் கிரெடிட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்ட அடிப்படையில் நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. என தெரிவித்துள்ளார்.