மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுரை மாநகராட்சி, திருப்பரங்குன்றம் தாலுகா , பரவை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.
இதனால் மதுரை மாநகரத்தில் செயல்பட்டுவந்த முக்கிய காய்கறி மார்க்கெட்டான பரவை மார்க்கெட் ஜூன் 24ஆம் தேதியில் இருந்து மூடப்பட்டது. ஜூலை 15ஆம் தேதி முதல் மதுரை மாநகரத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் பரவை காய்கறி மார்க்கெட் திறக்கப்படவில்லை.
பரவை மார்க்கெட் மாற்று இடத்தில் அமைவதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் உச்சப்பட்டி துணைக்கோள் நகரங்களில் நேற்று மாலை தற்காலிக காய்கறி மார்க்கெட்டினை மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் முன்னிலையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 300க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக தற்காலிக காய்கறி மார்க்கெட்டின் உள்ளே வரும் அனைவருக்கும் கை கழுவுவதற்கான சானிடைசர் வசதி, சத்து மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது.
மேலும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநிலத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.