மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் சொத்துக்களுக்கு நில வரித்துறை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பசலிக்கு 1,701 ரூபாய் என நகர்ப்புற நில வரி விதித்தது. அப்போது, கோயில் சொத்துக்களுக்கு நகர்ப்புற நில வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என கோயில் சார்பாக தெரிவித்தும், நிர்வாக தீர்ப்பாயத்தில் வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும், 25 ஆண்டுகளுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போது 25 ஆண்டுகள் கழித்து கோயில் சார்பில் 25 ஆண்டுகளுக்கும் சேர்த்து வருமானவரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, கோயில் சொத்துக்களுக்கு நகர்ப்புற நில வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என விதிகள் உள்ளன. நிலவரி கட்டக் கூறி அனுப்பப்பட்ட நிர்வாகத் துறையின் நோட்டீஸை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நில வரித் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.