மதுரையில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 200 என்ற எண்ணிக்கையில் இருந்த பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது 300ஆக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மதுரையில் இன்று மட்டும் 379 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86ஆக அதிகரித்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் தற்போது வரை ஐந்தாயிரத்து 57 பேர் சிகிச்சைபெற்றுள்ளனர். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், வேளாண்மைப் பல்கலைக் கழகம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் கரோனா சிகிச்சை மையங்கள் இயங்கிவருகின்றன. இன்று மட்டும் 49 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1160ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3 ஆயிரத்து 811 பேர் சிகிச்சையில் உள்ளனர்.