சென்னையிலிருந்து சேலத்திற்கு மூன்று மணி நேரத்தில் செல்லும் வகையில் எட்டு வழி பசுமை சாலையை ரூ.10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்க மத்திய போக்குவரத்துத் துறை ஒப்புதல் அளித்தது.
சுமார் 277 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்படவுள்ள எட்டு வழிச் சாலைக்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 1,900 ஹெக்டர் நிலங்களை (வனப்பகுதிகள் உட்பட) கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை கைவிடக் கோரி ஐந்து மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் வழக்கறிஞர்கள் ஏ.பி.சூரியப்பிரகாசம், பாமக வழக்கறிஞர் வி.பாலு உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பின்னர், தங்கள் நிலம் பறிக்கப்படுவதாக கூறி ஐந்து மாவட்ட விவசாயிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் சுமார் எட்டு மாதங்களாக நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடரமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.
மேலும், தமிழக அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் திருமாறன், நிலம் கையகப்படுத்தும் பணி விதிகளுக்கு உட்பட்டே நடைபெறுவதாக தெரிவித்தார்.
இதற்கிடையில், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோது மக்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து சிபிசிஐடி-யின் எஸ்.பி பிரவீன்குமார் மேற்பார்வையில், டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதனையடுத்து திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, ஜனவரி 4ஆம் தேதிக்குள் மனுதாரர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் இன்று (08.04.19) தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்,
* சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது.
* மேலும், திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.
* சம்மந்தப்பட்ட மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கட்டாயம் கருத்து கேட்க வேண்டும்.
* திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
* புதிய திட்ட அறிக்கை தயாரித்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தலாம்
மேற்கண்டவாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக வழக்கறிஞர் பாலு, அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும், விவசாயிகளுக்கு தேவையற்ற எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகத்தான் பாமக செயல்பபடும் என்றார்.