திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு தெற்கு மாடவீதி பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (22). இவர் சொந்தமாக சொகுசு கார் வைத்துள்ளார். ஊரடங்கு காரணமாக தனது காரை கடந்த நான்கு மாதங்களாக ஓட்டாமல் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை20) காலை காரை சுத்தம் செய்த கமலேஷ் காரை ஸ்டார்ட் செய்து திருவள்ளூர் பகுதிவரை காரை ஓட்டிச் சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து மீண்டும் திருவலாங்காடு நோக்கி காரை ஓட்டி வந்த போது நார்த்தா வாடா என்ற பகுதியில் கார் முன்புறத்தில் இருந்து கரும்புகை வெளியானது.
அதைத்தொடர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தீப்பற்றியது. இதனால் நிலைகுலைந்து போன கமலேஷ் செய்வது அறியாமல் திகைத்து போனார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக வாளிகளில் தண்ணீர் பிடித்துக்கொண்டு தீப்பிடித்து எரிந்த காரை அணைத்தனர்.
இதில், கமலேஷ் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், நீண்ட நாள்களாக கார் இயக்கப்படாததால் இயந்திர கோளாறு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என கருதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி!