பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அலுவலர்கள் ஆகியோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதேபோல, அந்தந்த மாநிலங்களில், முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அலுவலர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணைமேயர் முதல் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள், ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடுகள், குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புக்கள் முறையீடு மன்ற நடுவம் அமைக்கப்பட்டது.
இந்த நடுவத்தின் நடுவராக முதலில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சோ. அய்யர், கடந்த மார்ச் வரை இப்பதவியில் நீடித்தார். தற்போது, இப்பதவி காலியாக உள்ளது. இப்பதவிக்குத் தகுதியானவர்களை முதலமைச்சர் பரிந்துரைக்க, ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும்.
தற்போது பதவி காலியாக உள்ளதாலும், ஏராளமான முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ளதாலும் நடுவரை நியமிக்கும்படி ஆளுநரின் செயலருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் அன்பழகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அலுவலர்களும் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் அம்மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.