மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை அமைச்சர் நிதின் கட்கரியை, லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் ஆர்.கே மாத்தூர் நேற்று (நவம்.10) டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது லடாக் யூனியன் பிரதேசத்தின் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக அமைச்சகம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது.
அப்போது, லடாக்கின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்யும் வகையில் பாஷ்மினா ஆடுகளை வளர்ப்பதை ஊக்குவித்து, அதன் தோலில் தயாரிக்கப்படும் கம்பளி உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசின் உதவித் தேவைப்படுவதாக மாத்தூர் வலியுறுத்தியதாக தெரிகிறது.
சோஜிலா சுரங்கப்பாதையின் பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ள அமைச்சர் கட்கரிக்கு இதன்போது துணை நிலை ஆளுநர் மாத்தூர் நன்றி தெரிவித்தார்.
434 கி.மீ நீளமுள்ள ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சோஜிலா சுரங்கப்பாதை திட்டம் சில ஆண்டுகளில் நிறைவடையும் என்று அமைச்சர் கட்கரி உறுதியளித்தார்.