கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், அதனைத் தடை செய்யக்கோரி பாஜக, இந்து முன்னணி கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இதனால் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கறுப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன் என்பவரைக் கைது செய்தனர்.
பின்னர் கந்தசஷ்டி வீடியோவை பேசி வெளியிட்ட நபரான சுரேந்திரனை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், அவர் புதுச்சேரியில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சுரேந்திரனைக் காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்தைச் சோதனை செய்தபோது கணினி உள்ளிட்ட ஆவணங்களை, அங்கு பணியாற்றிய ஊழியர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இருப்பினும், சோதனையில் கந்தசஷ்டி கவசம் உருவாக்கியது தொடர்பான முக்கிய ஆவணங்களைக் காவல் துறையினர் கைப்பற்றினர்.
மேலும் சுரேந்திரன், செந்தில் வாசன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். கந்தசஷ்டி குறித்த வெளியிட்ட வீடியோவை யூடியூபிலிருந்து சைபர் கிரைம் முடக்கியது. இந்நிலையில், அந்த அலுவலகத்தில் கைப்பற்றிய ஆவணங்களை யூடியூப் நிர்வாகத்திற்கு அனுப்பி, கறுப்பர் கூட்டம் சேனலை முடக்கக்கோரி மத்திய குற்றபிரிவு காவல் துறையினர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.