தென்னிந்தியாவின் மலைவாசப் பகுதிகளில் அரிய வகை மருத்துவ மூலிகைகளுக்கும், இயற்கைக் கொஞ்சும் எழிலுக்கும் பெயர் பெற்ற கொல்லி மலை, கடல் மட்டத்திலிருந்து 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கொல்லி மலையில் 14 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
இங்கு வசித்து வரும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் விவசாயத்தையே முக்கியத் தொழிலாக செய்து வருகின்றனர்.
இவ்வாண்டு தொடக்கத்தில் நல்ல மழை பெய்ததால், அம்மழை நீரைக் கொண்டு சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், கார் ரக நெல்லை நடவு செய்தனர்.
ஆறு மாத கால சாகுபடிப் பயிரான, இவ்வகை நெல்லின் அறுவடைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
எவ்வித இயந்திரங்களையும் கொண்டு அறுவடை செய்யாமல், பாரம்பரிய முறையில் அங்குள்ள மலை வாழ் மக்களே நெற்கதிர்களை அறுத்து, கட்டுகளாகக் கட்டி, அதனை களத்து மேட்டில் அடுக்கி வைக்கின்றனர்.
மேலும், அவற்றை சிறுகச் சிறுகப் பிரித்து, அதிலிருந்து நெல் மணிகளைத் தனியே எடுக்க மாடுகளைக் கொண்டு, அவர்களால் பாரம்பரியமாக கைக்கொள்ளப்பட்டு வரும் முறையில் தாம்பு ஓட்டினர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "நடவிற்குப் பின்பு போதிய மழையின்மையால் விளைச்சல் குறைந்துள்ளது. தங்களது உணவுத் தேவைக்குக்கூட, இந்த நெல் போதுமானதாக இல்லாமல் போகும் நிலையே உள்ளது" என வேதனையுடன் தெரிவித்தனர்.
இன்றைய நவீன வேளாண் யுகத்தில், பல்வேறு அறுவடை இயந்திரங்கள் நடைமுறையில் பயன்பாட்டில் இருந்தாலும் பழமை மாறாத, மலைவாழ் மக்கள் தங்களது இயற்கை வேளாண் முறையையே இன்று வரை கடைப்பிடித்து வருவது, நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.