12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியள்ளன. இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது லீக் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 55 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து, 184 ரன் என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எட்டியது. இதன் மூலம், கொல்கத்தா அணி இப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 21 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணி விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளை பெற்றுள்ளது. இதனால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அந்த அணிக்கு பிரகாசமாக அமைந்துள்ளது.