திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி 30 கிலோ எடையுள்ள சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பாசில் ஃபரீத் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலருடன் மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலர் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்ததை அடுத்து, முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர், ஐ.டி செயலர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட சரித்தின் அறிக்கையின்படி, தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கர் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் சதி செய்த செயலகத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு சிவசங்கர் கூறியபடி வாடகைக்கு எடுத்ததாக ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. சிவசங்கர் ஐ.டி செயலராக இருந்தபோது ஸ்வப்னா சுரேஷை ஐ.டி துறைக்கு நியமித்ததில் சட்டவிரோதமாக தவறு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவசங்கரிடம் நேற்று (ஜூலை 24) 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் உள்ள ஒருவரின் பெயரை பயன்படுத்தி தந்திரமான முறையில் தங்கம் கடத்த முயன்றது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து சிவசங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.