மத்திய அரசு கூட்டுறவு வங்கிகள், நகர வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு, பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் தனபாலன் கூறுகையில், ”கூட்டுறவு வங்கிகள் எல்லாம் இன்றைக்கு அரசியல்வாதிகளால் சிதைவடைந்து அதன் செயல்பாடுகள் முடங்கிக்கிடக்கிறது. மத்திய அரசின் இந்தச் செயலால், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் அதிக கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், தற்போது நிலவும் சூழலில் 100 ஏக்கர் விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால், 11.33 ஏக்கர் அளவுக்கு மட்டுமே மாநில கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. இதனால் விவசாயிகள், விவசாயம் செய்ய தங்களுக்கு தேவையான மீதி தொகையை தனியார், வணிக வங்கிகளில் வாங்கும் நிலை உள்ளது.
இத்தகைய மாற்றம் வரும்போது விவசாயத்திற்காக வங்கிகள் அளிக்கும் கடன் 4 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வட்டிக்குள் விவசாயிகளுக்கு நேரடியாக கடன் கிடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளையும், நகர வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருவாரூரை திணர வைக்கும் கோவிட்-19 பாதிப்பு - அச்சத்தில் மக்கள்!