கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் மீது நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து, காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண் மருத்துவரைத் தொடர்ந்து பெண் மென்பொறியாளர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நேசமணி நகர் காவல் துறையினர் காசி மீது மற்றொரு வழக்கை பதிவு செய்தனர்.
இதேபோல், வடசேரியில் மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது இரண்டு வழக்குகளும், கன்னியாகுமரி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவானது. மேலும் ஒரு கந்து வட்டி வழக்கும் காசியின் மீது பதிவானது. இவர் மீது தொடர் புகார்கள் எழுந்ததால் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரை காவல் துறையினர் இரண்டு முறை காவலில் எடுத்து விசாரித்தனர்.
மேலும், காசி விவகாரத்தில் அரசியல் தலையீடு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது. இதன் எதிரொலியாக, காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. காசி தொடர்பான வழக்குகளையும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நாகர்கோவில் சிபிசிஐடி ஆய்வாளர் சாந்தி தலைமையிலான காவலர்கள் வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்காக அந்தந்த காவல் நிலையங்களில் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஆய்வாளர் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.