ரஷ்யாவின் (தற்போதைய ஜெர்மனி) ட்ரையர் நகரில் 1818-ல் பிறந்தார். தந்தை வழக்கறிஞர். 17-வது வயதில் பார்ன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் பயின்றார். யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
படிக்கும்போது ஆய்வு மாணவர்களுக்கான சங்கத்தை நிறுவினார். வரலாறு, பொருளாதாரம் தொடர்பாக அங்கு நடக்கும் காரசாரமான விவாதங்களில் பங்கேற்றார். இவரது சொல்லாற்றலும், பேசுகிற விஷயம் பற்றிய ஆழமான அறிவும் பல்கலைக்கழகத்தில் இவரது மதிப்பை உயர்த்தின.
ஏராளமான மொழிகளைக் கற்றார். மாணவப் பருவத்தில் நிறையக் கவிதைகள் எழுதினார். படிப்பை முடித்து ரைன்லாந்து கெசட் இதழில் பணியில் சேர்ந்த இவர், 10 மாதங்களில் அதன் ஆசிரியராக உயர்ந்தார். ‘தொழிலாளர்களின் நிலை உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் உள்ளது. ஒன்றுசேர்ந்தால்தான் அவர்கள் வாழ்வில் விடுதலை கிடைக்கும்’ என்று ஆணித்தரமாகக் கூறினார். அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.
ஜெர்மனி அரசு இவர் நடத்திய இதழைத் தடை செய்த பிறகு, பாரீஸ் சென்றார். அங்கு பிரெட்ரிக் ஏங்கல்ஸைச் சந்தித்தார். ஒரேமாதிரி கருத்துகள், சிந்தனைகள் கொண்ட இருவருக்கும் இடையே இயல்பான, ஆழமான நட்பு மலர்ந்தது. இது இறுதிவரை நீடித்தது.
சுதந்திரமான, புரட்சிகரமான சிந்தனைகளைப் பரப்பியதால் பிரான்ஸிலும் பல பிரச்சினைகளைச் சந்தித்தார். அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பெல்ஜியம் சென்றார். ‘தி பாவர்ட்டி ஆஃப் பிலாசபி’ என்ற தனது முதல் நூலை அங்கு 1847-ல் வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ‘தி கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ’ என்ற நூலை ஏங்கல்ஸுடன் இணைந்து எழுதி வெளியிட்டார்.
புரட்சிகர இயக்கங்களில் இணைந்து பணியாற்றியதால் எங்குச் சென்றாலும் நாடுகடத்தப்பட்டார். இறுதியாக லண்டன் சென்றவர், அங்கேயே நிரந்தரமாகத் தங்கினார். பல ஆண்டுகள் வறுமையோடும், உடல்நலக் கோளாறுகளோடும் போராடினார். லண்டனில் வாழ்ந்தபோது அங்கிருந்த அருங்காட்சியகத்தில் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். தனது கட்டுரைகள், நூல்களுக்காக அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
அரசியல், பொருளாதார நூல்கள் எழுத அதிக நேரம் செலவிட்டார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதினார். ஜெர்மன், ஆங்கில இதழ்களிலும் எழுதினார். லண்டனில் சர்வதேச தொழிலாளர் சங்கம், ஜெர்மன் தொழிலாளர் கல்வி சங்கம் தொடங்க பெரிதும் உதவினார்.
இவரது அரசியல், பொருளாதார தத்துவங்கள், கோட்பாடுகள் ‘மார்க்சிஸம்’ எனப் புகழ்பெற்றது. வரலாற்றை அறிவியலோடு தொடர்புப்படுத்திப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். இவரது செய்திகள் உலகம் முழுவதும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றின.
‘தாஸ் கேபிடல்’ (மூலதனம்) என்ற நூலை எழுதினார். மொத்தம் 3 தொகுதிகள் கொண்ட இந்நூலின் முதல் பகுதி 1867-ல் வெளி வந்தது. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நூலான இது அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் கருதப்படுகிறது.
மனிதக்குல முன்னேற்றத்துக்காகவும், பாட்டாளி வர்க்கத்தினரின் விடுதலைக்காகவும் இறுதி மூச்சுவரை பாடுபட்டார். உலகின் தலைசிறந்த மெய்யியலாளர், அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுநர், ஆய்வறிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், புரட்சியாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட காரல் மார்க்ஸ் 65-வது வயதில் மார்ச் 14, 1883ல் மறைந்தார்.