கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவிலில் புதியதாக அமைய இருக்கும் பேருந்து நிலையத்துக்கு மார்ஷல் நேசமணி பெயரைச் சூட்ட வேண்டும் என்று குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் வேண்டுகோள்விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "குமரி மாவட்டம் கேரளாவிலிருந்து தாய் தமிழ்நாட்டுடன் இணைய அரும்பாடுபட்ட தலைவர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி. இவரது பிறந்த நாள் இன்று (ஜூன் 12) கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாகர்கோவிலில் புதிதாக அமைய இருக்கும் பேருந்து நிலையத்திற்கும், அதனைப் போல் மார்த்தாண்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கும் மார்ஷல் நேசமணி பெயரைச் சூட்டவேண்டும்.
இதேபோல் கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். இது தொடர்பாக எனது கருத்துகளை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். எனவே அரசு இந்தப் பெயர்களைச் சூட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அருவிக்கரை ஊராட்சிக்குள்பட்ட தானிவிளை- பூவன்கோடு நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பக்கச் சுவர் உடைந்து இருப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலைத் துறை பாலத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.
நாகர்கோவில் அனந்தனார் சானலில் தண்ணீர் ஜூன் 1ஆம் தேதி திறப்பது வழக்கம். ஆனால் இதுவரை தண்ணீர் வராததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சானலில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.