கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றிய 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா பாதிப்பிற்கு உள்ளாகினர்.
இதில், 140-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 80-க்கும் மேற்பட்டோர் தற்போது மீண்டும் பணிக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கரோனா பாதிப்பிற்கு உள்ளாகி பூரண குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள 45 காவலர்களுக்கு முதற்கட்டமாகப் பாராட்டுச் சான்றிதழ் நேற்று (ஆக. 26) வழங்கப்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி பணிக்குத் திரும்பிய காவலர்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், "ஆரோக்கியமான உணவுமுறை, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கரோனா தொற்றை மன தைரியத்துடன் காவலர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
கரோனா பாதிப்புக்குள்ளான அனைத்து காவலர்களும் கரோனா தொற்றிலிருந்து மீண்டுவர அனைத்துவிதமான உதவிகளையும் குமரி மாவட்ட காவல் துறை செய்யும்" எனக் கூறினார்.