காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் நடைபெறும் பிரசித்திப் பெற்ற உற்சவங்களில் நடவாவி உற்சவமும் ஒன்று. ஆண்டுதோறும் வரதராஜப்பெருமாள் உற்சவர் கோயிலிலிருந்து புறப்பட்டு பல்வேறு கிராமங்களில் அருள்பாலித்து சித்ரா பௌர்ணமி அன்று ஐயங்கார் குளம் கிராமத்திலுள்ள நடவாவி கிணற்றில் இறங்குவார்.
அங்கு அவருக்கு திருவாராதனம் செய்யப்படும். அதன் பிறகு சுவாமி அங்கிருந்து புறப்பட்டு கீழ் ரோட்டிலுள்ள பாலாற்றங்கரையில் திருமஞ்சனம் நடைபெறும். இந்நிகழ்ச்சியினை காண சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து சுவாமியை தரிசனம் செய்து செல்வார்கள்.
ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் இவ்விழாவானது தற்போது கரோனா தொற்று மிக அதிகமாக இருப்பதால், தடுப்பு நடவடிக்கையாக மேற்படி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.