கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி ஜி1 காவல் நிலையத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றக்கூடிய 40க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று (ஜூன் 26) வெளியான பரிசோதனை முடிவில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜி1 காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 15 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரனுக்கு கரோனா தொற்றுநோய் உறுதியாகி தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், திருக்கோவிலூர் காவல் நிலையம் பகுதிகளில் பணியாற்றி வந்த நான்கு காவலர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான காவலர், பணியாற்றிவந்த காவல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், அவர்களது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கள்ளக்குறிச்சியில் 18 காவலர்களுக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சக காவலர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.