விருதுநகர் மாவட்டம் பாரப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் பத்ரகாளி (77). இவர் நேற்று பிற்பகல் தனது வீட்டிலிருந்து சந்திக்கூட தெருவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பத்ரகாளியிடம் செயினை கழுத்தில் அணிந்திருந்தால் யாராவது அதை பறித்து திருடிச்சென்று விடுவார்கள், எனவே செயின், வளையலை பத்திரமாக வையுங்கள் அதற்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று சொல்லி மூதாட்டியிடம் கையில் அணிந்திருந்த இரண்டரை சவரன் வளையல், கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் செயினை வாங்கி பேப்பரில் மடித்து மூதாட்டியின் பையில் வைத்துள்ளனர்.
அதை தொடர்ந்து மூதாட்டி மகள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அந்த பொட்டலத்தில் கவரிங் வளையலும், கூழாங்கற்களும் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி இச்சம்பவம் குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விருதுநகர் பஜார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.