தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் என சுமார் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணி மடிந்து இன்று (ஜூலை 29) தனிமைப்படுத்துவதற்காக விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் விடுதியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால், பல மணி நேரம் விடுதி முன்பாகவே தரையில் அமர்ந்து காத்திருந்தனர். இந்த விடுதியில் இதற்கு முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியிருந்த அறைகள் முறையாக கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யாமல் இருந்ததால், தற்போது தங்குவதற்கு அழைத்து வரப்பட்டவர்கள் சாலையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.
பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர், விடுதி மேலாளரிடம் பேசியதையடுத்து மாற்று அறைகள் ஏற்பாடு செய்யபபட்டு, அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "சேவை மனப்பான்மையுடன் மனித உயிர்களைக் காப்பதற்காகப் பணியாற்றிவிட்டு, தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று வந்தால், இங்கே சுத்தமான இருப்பிட வசதிகள் இல்லாமல் உள்ளது.
மேலும் உடனடியாக அறையில் தங்க வேண்டும் என்றால் நீங்களாகவே சுத்தம் செய்து தங்கிக் கொள்ளுங்கள் என்று தனியார் விடுதியினர் கூறுகின்றனர். தனிமைப்படுத்திக் கொள்வதற்காக வந்த இடத்தில் நாங்களாகவே சுத்தம் செய்யும் வேலையும் செய்ய வேண்டுமா?" என்று ஆதங்கப்பட்டனர்.