ஈரானின் அபாயகரமான அணுசக்தி பயிற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 2015ஆம் ஆண்டு ஈரானுடன், அமெரிக்கா உள்பட ஆறு வல்லரசு நாடுகள் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த ஒப்பந்தத்திலிருந்து 2018ஆம் ஆண்டு மே மாதம், அமெரிக்க விலகியது. இதைத்தொடர்ந்து, ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. இதனிடையே, ஈரானிடமிருந்து எண்ணை வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அளித்திருந்த ஆறு மாத தற்காலிக அனுமதியை கடந்த மே மாதம், அமெரிக்கா ரத்து செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான் அரசு, தாங்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறவுள்ளதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே மோதலும், மத்திய கிழக்கு நாடுகள் இடையில் பதற்றமும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் வகையில் 300 கிலோவுக்கும் அதிகமாக யுரேனியத்தை ஈரான் சேர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது அமெரிக்கா-ஈரான் மோதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் அணுசக்தி ஆயுதங்களைத் தயாரிக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என காட்டமாகத் தெரிவித்துள்ளது.