நடப்பு ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி, விசாகாப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இருப்பினும், ஜடேஜா வீசிய இறுதி ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் இஷாந்த் ஷர்மா, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். இதனால், டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. இப்போட்டியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பந்த், 25 பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 38 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணியின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், பிராவோ, தீபக் சஹார், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.