சென்னை எழும்பூரில் உள்ள சுப்பராயன் தெருவில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மக்கள் நெருக்கமான பகுதிகளில் அதிக அளவில் பரவும் தொற்றாக கரோனா வைரஸ் இருக்கிறது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் மனஉளைச்சலோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சென்னையில் கரோனா தொற்றை குறைக்க வேண்டும் என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரிக்கப்பட்டுள்ள ஆறு மண்டலங்களுக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. காவல்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் தினமும் கலந்தாலோசித்து ஒவ்வொரு மண்டலத்திலும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசின் தொடர் நடவடிக்கையால் விரைவில் தொற்று பரவல் குறையும் இதற்கான பிரதிபலனை விரைவில் பார்க்கலாம்.
மீனவர்களை பொருத்தவரையில் கரோனா பரவலை பொருத்து மீன் பிடிப்பதற்கான தளர்வுகள் பின்னர் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
பதிவு பெற்ற ஐந்து லட்சம் மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு இருக்கிறது" என தெரிவித்தார்.