உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், ரோகித் ஷர்மா (140), கோலி (77), கே.எல்.ராகுல்(57) ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதனால், இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ஆமிர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரரான இமாம்-உல்-ஹக் ஏழு ரன்களில் வெளியேறினர். இந்த இக்கட்டான நிலையில், ஃபகர் சமான் - பாபர் அசாம் ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்து அணியின் ரன்களை உயர்த்தியது. இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 114 ரன்களை சேர்த்த நிலையில், பாபர் அசாம் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, சிறப்பாக ஆடிய ஃபகர் சமான் 62 ரன்களில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 25.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து, முகமது ஹபிஸ், சோயிப் மாலிக், சர்ஃப்ராஸ் அஹமது ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்திவைக்ப்பட்டது.
இதையடுத்து, மழை நின்றப் பின் டாக்வொர்த் லூவிஸ் முறைப்படி இரண்டாவது இன்னிஸ் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால், பாகிஸ்தான் அணி மீதமுள்ள ஐந்து ஓவர்களில் 136 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில், பாகிஸ்தான் அணி 40 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன்மூலம், இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் ஏழாவது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தனது வரலாற்றை தக்க வைத்துக் கொண்டுள்ளது.