இது தொடர்பாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று (நவ.16) வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய அச்சுறுத்தலான கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் இரண்டு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள். வரும் காலங்களில், ஒரு நாளைக்கு ஏறத்தாழ 10 லட்சம் கரோனா கண்டறிதல் சோதனைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளன. சோதனை கண்டறியும் திறனும் தொழில்நுட்பமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கோவிட்-19 பாதிப்பால் நாடு முழுவதும் 88 லட்சத்து 48 ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 82 லட்சத்து 51 ஆயிரத்து 378 பேர் குணமடைந்தும் உள்ளனர். நாட்டின் பல்வேறு மருந்துவமனைகளில் நான்கு லட்சத்து 64 ஆயிரத்து 908 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 93.27 விழுக்காடு பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். அதேபோல், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 45 விழுக்காட்டிலிருந்த சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 20 விழுக்காடாக சரிவு கண்டுள்ளது.
அதாவது, தொடர்ந்து 44ஆவது நாளாக இன்றும் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையைவிட நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்தே உள்ளது. இது ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்த எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள உயர்மட்ட விரிவான சோதனைகளைத் தொடர்ந்து, அதன் விளைவாக நிகர பாதிப்பாளர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 78.59 விழுக்காட்டினர் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய அரசின் தொடர்ச்சியான மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தொடர் சரிவுக்கு பங்களித்திருக்கிறது. வீடுவீடாகக் கணக்கெடுப்பு, சுற்றளவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சரியான நேரத்தில் உதவிகளை வழங்குவது, கட்டுப்பாட்டு மண்டலங்களின் கண்காணிப்பு, நோயறிதல், பராமரிப்பு நெறிமுறை, மருத்துவ மேலாண்மை ஆகியவை காரணமாக நாம் வெகுவாக பலனடைந்துள்ளோம்.
இன்றுவரை 12 கோடியே 56 லட்சத்து 98 ஆயிரத்து 525 பேரிடம் கரோனா வைரஸ் கண்டறிதல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.